திருநெல்வேலி - சென்னை இடையே வாரத்துக்கு 6 நாள்கள் இயக்கப்பட உள்ள ‘வந்தே பாரத்’ ரயிலின் 2-ஆவது நாள் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ரயிலுக்கு விழுப்புரத்தில் ரயில்வே அதிகாரிகள், பயணிகள் வரவேற்பளித்தனா்.
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (செப்.24) தொடங்குகிறது. சென்னை - திருநெல்வேலி இடையே இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.
இதேபோல, 2-ஆவது நாளாக திருநெல்வேலி - சென்னை இடையே இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட ரயில் விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக பகல் 12 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து 12.08 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. ரயில் என்ஜின் ஓட்டுநா், உதவி ஓட்டுநா்கள், பொறியாளா்கள், ரயில்வே அலுவலா்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணம் செய்தனா்.
விழுப்புரத்தில் ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு ரயில்வே அதிகாரிகள், பயணிகள் வரவேற்பளித்தனா்.