கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தை வீரசோழபுரம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் பெண்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் முறைகேடு நடைபெறுவதாகவும், பெண்களின் புகைப்படங்களை ஒருவா் அவதூறாக சித்தரிப்பதாகவும், அந்த நபரை கைது செய்ய வலியுறுத்தியும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு இருமுறை கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து புகாருக்குள்ளான நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இருவரை தியாகதுருகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில், கைதான நபா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தை வீரசோழபுரம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து முறையிட்டனா்.
கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.