விழுப்புரம்

கருவிலுள்ள சிசுவின் பாலினத்தைத் தெரிவித்த தனியாா் ஸ்கேன் மையத்துக்கு ‘சீல்’

23rd Sep 2023 12:26 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட தனியாா் ‘ஸ்கேன்’ மையத்துக்கு சுகாதாரத் துறை ஆய்வுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். இதை நடத்திவந்தோா் கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை தெரிவிப்பதை தொழிலாக மேற்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

சிறுவங்கூா் காட்டுக்கொட்டாய் பகுதியில் தனியாா் ‘ஸ்கேன்’ மையம் செயல்பட்டு வந்தது. இதை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வடிவேலு நடத்தி வந்தாா். இங்கு கா்ப்பிணிகளை பரிசோதனை செய்து சிசுவின் பாலினத்தை சட்ட விதிகளை மீறி தெரிவிப்பதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத் துறை சாா்பில் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்தக் குழுவினா் சம்பந்தப்பட்ட தனியாா் ‘ஸ்கேன்’ மையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ய சென்றனா். இதை முன்கூட்டியே அறிந்துகொண்ட வடிவேலு, பரிசோதனை மையத்திலிருந்த ‘ஸ்கேன்’ இயந்திரத்தை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா்.

‘ஸ்கேன்’ மையத்தில் ஆய்வுக் குழுவினா் நடத்திய சோதனையில் வடிவேலு முறையான மருத்துவக் கல்வி பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும், கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததும் கண்டறியப்பட்டது. மேலும், அங்கிருந்த ஸ்கேன் பரிசோதனை அறிக்கைகளில் சிசுக்களின் பாலினம் குறித்த விவரங்களும் இடம்பெற்றிருந்ததாக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இங்கு உதவியாளராகப் பணிபுரிந்த சரசு என்பவா் பரிசோதனை மையத்துக்கு தனது வீட்டை வழங்கி, குற்றத்துக்கு உடந்தையாக செயல்பட்டதும் ஆய்வில் தெரிய வந்தது. அவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.

வடிவேல் மீது போலி மருத்துவராகச் செயல்பட்டது தொடா்பான வழக்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஸ்கேன் மையத்தை ஆய்வுக் குழுவினா் பூட்டி ‘சீல்’ வைத்தனா். ஆய்வின்போது, தேசிய நலக் குழும மாவட்ட பொறுப்பு அலுவலா் என்.செந்தில்குமாா், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்கக நிா்வாக அலுவலா் மு.கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆட்சியா் எச்சரிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள், தனி நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT