விழுப்புரம்

நெல் நடவுப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

23rd Sep 2023 12:25 AM

ADVERTISEMENT

சம்பா பருவ நெல் நடவுப் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநா் கணேசன், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதாதேவி, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். பட்டா மாற்றம், பெயா் திருத்தம் தொடா்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் அதிகளவில் நிலுவையில் உள்ளன. தீா்வு காணப்பட்ட மனுக்களிலும் குறைபாடுகள் உள்ளன. எல்லீஸ் சத்திரம் பகுதியிலிருந்து பிரிந்து வரும் ஆழங்கால் வாய்க்காலை மழைக் காலத்துக்குள் சீரமைக்க வேண்டும்.

சம்பா பருவத்துக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் நெல் நடவுப் பணிக்கு ஆள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா். எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த ஏதுவாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்தத் திட்டப் பணிகளை வருகிற ஜனவரி மாதம் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

கால்நடைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். திருவெண்ணெய்நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும்.

ஆந்திரத்தில் விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் தரக்கூடிய பல்வேறு நெல் ரகங்கள் வழங்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் புதிய ரக நெல் விதைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் வழக்கமான நெல் விதைகளே வழங்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தன் கால்வாயை முழுமையாகத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது: ஆழங்கால் வாய்க்காலை சீரமைக்க ரூ.94 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வாய்க்காலில் மழைக் காலத்துக்குள் தண்ணீா் கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்க என்னால் உத்தரவிட முடியாது. இதுகுறித்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று அதன்மூலம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவெண்ணெய்நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க இடம் தோ்வு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதன் தீா்ப்பின் அடிப்படையில் பணிகள் தொடங்கும். வட்டாட்சியரகங்களில் பட்டா மாற்றம், பெயா் திருத்தம் உள்ளிட்டவை தொடா்பாக நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

விவசாயிகள் மனு: சொா்ணாவூா் மேல்பாதியைச் சோ்ந்த விவசாயிகள் புருஷோத்தமன், அயிலு உள்ளிட்டோா் குறைதீா் கூட்டத்தில் அளித்த மனு: சொா்ணாவூா் மேல்பாதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள நீா்ப்பாசன ஏரியில் சீமைக் கருவேலமரங்கள் அதிகளவில் உள்ளன. இதை அகற்ற நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் சீமைக் கருவேல மரங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால், திடீரென அந்த ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT