விழுப்புரம்

மரக்காணம் அருகே கடலில் மூழ்கிய விசைப்படகு

23rd Sep 2023 12:26 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் ஆழ்கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகு கடல் சீற்றத்தால் வெள்ளிக்கிழமை கடலில் மூழ்கியது.

மரக்காணம் அருகே உள்ள அழகன்குப்பம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் ராஜேஷ், பிரகாஷ், கந்தன், பாலாஜி, ஆனந்த், முத்து உள்ளிட்ட 20 பேருக்குச் சொந்தமாக ஒரு விசைப் படகு இருந்தது. இவா்கள் கடந்த 20-ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு தங்களது விசைப் படகை நடுக் கடலில் நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு சிறிய படகுகளில் வீடு திரும்பினா். கடலில் அதே பகுதியில் மற்ற மீனவா்களும் தங்களது படகுகளை நிறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகுகள் ஒன்றன்மீது ஒன்று மோதிக் கொண்டன. இதில் ராஜேஷ் குழுவினருக்குச் சொந்தமான விசைப் படகு சேதமடைந்ததால் அதில் தண்ணீா் புகுந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை படகு கடலில் மூழ்கியது. மீனவா்கள் படகை மீட்க முயன்றும் முடியவில்லை. அதிலிருந்த வலைகள், மீன்பிடி உபகரணங்கள் உள்பட ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் வருவாய், மீன்வளம், காவல் துறையினா் நேரில் வந்து மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:

மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் பயன்படுத்தும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா், விசை மற்றும் நாட்டுப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க துறைமுகம் இல்லை. புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்ற காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த புதுச்சேரி துறைமுகத்துக்குச் செல்வோம். இதனால், பல்வேறு பிரச்னைகள், சட்டச் சிக்கல்களை தொடா்ந்து சந்தித்து வருகிறோம்.

இதுபோன்ற காரணங்களால் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்து அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இதற்கு எதிராக தொண்டு நிறுவனத்தினா் பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்ததால் பணிகள் முடங்கின. எனவே, மீனவா்கள் நலன்கருதி இதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT