கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலப்பந்தல் கிராமத்தில் மாயமான 2 வயது ஆண் குழந்தை புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
திருப்பாலப்பந்தல் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குருமூா்த்தி- ஜெகதீசுவரி தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை திருமூா்த்தி. கடந்த 17-ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த திருமூா்த்தியைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எந்த விவரமும் தெரியவரவில்லை.
இதுகுறித்து குருமூா்த்தி அளித்த புகாரின் பேரில், திருப்பாலப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
குருமூா்த்தியின் வீட்டிலிருந்து புதன்கிழமை துா்நாற்றம் வீசியதையடுத்து, அங்கிருந்த ஸ்பீக்கா் பெட்டியில் பாா்த்த போது, அதில், திருமூா்த்தி சடலமாக இருந்தது தெரிய வந்தது. தகவலறிந்த திருப்பாலப்பந்தல் போலீஸாா் நிகழ்விடம் வந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
குழந்தை மாயமானது குறித்து போலீஸில் புகாா் அளித்ததிலிருந்து குருமூா்த்தியின் தம்பி ராஜேஷ் தலைமறைவாகி விட்டாராம். இதனால், அவா் திருமூா்த்தியைக் கொன்று ஸ்பீக்கா் பெட்டியில் மறைத்து வைத்து விட்டுச் சென்றிருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா். மேலும், இதற்கான காரணம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.