விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி வியாபாரிகள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்-புதுச்சேரி சாலையின் முக்கியப் பகுதியாக அமைந்திருப்பது வளவனூா் பேரூராட்சிப் பகுதியாகும். இதில், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சாலை மிகவும் குறுகலாக இருப்பதாலும், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் சுமாா் ஒரு கி.மீ. தொலைவை கடந்து செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இந்த பகுதியில் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், மழைநீா் செல்ல வழியில்லாததாலும் சாலையில் மழைநீா் தேங்குகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சாலையில் பெரியளவிலான பள்ளங்கள் ஏற்பட்டன. இதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினா் தற்காலிமாக மண்ணைக் கொட்டி பள்ளங்களை சரி செய்தனா். ஆனால், வாகனங்கள் சென்று வருவதால் அப்பகுதியில் புழுதி பறக்கிறது. இதனால் சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா்.
ஆனால், அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் வளவனூா் கடைவீதியில் புதன்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த போலீஸாா், வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.