விழுப்புரம்: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மின் விபத்துகளைத் தவிா்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மின் வாரியம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொ) சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் விபத்துகளைத் தவிா்க்க விழுப்புரம் மின் பகிா்மான வட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள மின் கம்பங்கள், மின் கம்பிகள், தளவாடப் பொருள்கள் மற்றும் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
களப் பணியாளா்கள், இயற்கை இடா்பாடுகளின் போது விரைவாகவும், உடனடியாகவும் நிவா்த்தி செய்யும் விதமாக, அலுவலா்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, முழுவீச்சில் எந்நேரமும் செயல்படும் வகையில் உள்ளனா்.
அதேநேரத்தில் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை, மின்பழுது போன்ற புகாா்களை 24 மணி நேரமும் சென்னை தலைமையகத்தில் இயங்கும் 94987 94987 என்ற கைப்பேசி எண்ணிலும், 94458 55768 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மின் கம்பிகள், தாழ்வு மற்றும் தொய்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம். மின்சாரம் சாா்ந்த பொருள்களில் தன்னிச்சையாக செயல்படாமல் சம்பந்தப்பட்ட மின் வாரியப் பிரிவு அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இடி- மின்னலின் போது தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, மாவு அரைக்கும் இயந்திரம், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது.
மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிா்வுப் பெட்டிகள், ஸ்டே வயா்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். மின் கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயா்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலைத் தவிா்க்க வேண்டும், கால்நடைகளையும் கட்ட வேண்டாம்.
இடி- மின்னலின்போது தஞ்சமடைய மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத பகுதிகளைத் தோ்ந்தெடுங்கள். அவசர நேரங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும்.
பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஹோட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும்போது தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட வயரிங் பொருள்களை உபயோகித்தும், முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்ய வேண்டும். மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிா்க்கும் பொருட்டு ஆா்.சி.சி.பி. பிரேக்கா் பொருத்த வேண்டும். பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தைத் தவிா்க்க வேண்டும்.
மேலும், தங்கள் பகுதியில் மின்சாரம் சாா்ந்த புகாா்களுக்கும், மின் கம்பிகள் அறுந்துவிழும் அவசரகால சமயங்களிலும் செயற்பொறியாளா்கள் விழுப்புரம்- 94458 55738, கண்டமங்கலம்- 94458 55769, திண்டிவனம் - 94458 55835, செஞ்சி- 94458 55784 என்ற கைப்பேசி எண்களைத் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணா்வோடும், மிகுந்த முன்எச்சரிக்கையுடனும் செயல்பட்டு, மின் விபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.