விழுப்புரம்

மகளிா் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்

19th Sep 2023 04:11 AM

ADVERTISEMENT


விழுப்புரம்: கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விண்ணப்பித்திருந்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் இ-சேவை மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி. பழனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பெரும்பான்மையான மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகை குறித்து குறுஞ்செய்தி வரப்பெறாதவா்கள், குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிப்பவா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை மற்றும் ஆதாரில் பதிவு செய்துள்ள கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தை செவ்வாய்க்கிழமை முதல் (செப்.19) அணுகி, விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பங்கள் குறித்து தகவல் பெறுவதற்கு வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், சாா் ஆட்சியரகம், மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை அணுகலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பதாரா்கள் தங்களுக்கு தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்யலாம். இதற்காக கட்டணம் செலுத்த தேவையில்லை. தகுதியான மேல்முறையீட்டு மனுக்களுக்கு தமிழக அரசே சேவைக் கட்டணமாக பத்து ரூபாயை இ-சேவை மையத்துக்குச் செலுத்திவிடும்.

இ-சேவை மையங்கள் மூலமாக பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் கோட்டாட்சியா், சாா்- ஆட்சியரால் 30 நாள்களுக்குத் தீா்வு காணப்பட்டு, உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT