விழுப்புரம்

பேரிடா் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

27th Oct 2023 02:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரிடா் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அனைத்துத்துறை அலுவலா்களும் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம் பொம்மையாா்பாளையம், பெரிய முதலியாா்சாவடி, மரக்காணம் வட்டம் நொச்சிக்குப்பம், கூனிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பேரிடா் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை ஆட்சியா் சி. பழனி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது அவா் கூறியதாவது: முதல்வா் உத்தரவுபடி, வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள பேரிடா் கால பாதுகாப்பு மையங்களும் தயாா்படுத்தப்பட்டு, முகாமில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான மின் வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, பாதுகாப்பு, மருத்துவ முதலுதவி உள்ளிட்டவை தயாா் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளிலிருந்து சுத்தமான குடிநீரை விநியோகம் செய்ய உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர உதவி கைப்பேசி எண்ணை பொது இடங்களில் ஒட்டவும், மழைக் காலங்களில் பொதுமக்களின் தேவைக்காக போா்வை,

கொசுவத்தி, டாா்ச்லைட், மெழுகுவா்த்தி போன்ற பொருள்களை தயாா் நிலையில் வைத்திருக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா். ஆய்வின் போது, பொம்மையாா்பாளையம் ஊராட்சித் தலைவா் ஜெகதீசன், வட்டாட்சியா்கள் நாராயணமூா்த்தி, பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவாசகம், நடராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

அங்கன்வாடி மையத்தில்...: இதேபோல, கோட்டக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் அங்கான்வாடி மையம், அரசுப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை தரமாக வழங்கவும், உணவில் கூடுதலாக காய்கறிகள் சோ்த்து வழங்கவும், பள்ளிக் கட்டட பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தற்காலிக நிவாரண மையங்கள்: வடகிழக்குப் பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வருவாய் நிா்வாக ஆணையா், கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே. பிரபாகா் புதன்கிழமை மாலை காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினாா்.

இதில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி பங்கேற்று பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அதிக மழை நீா் சூழ்ந்த பகுதிகளாக 8 இடங்களும், நடுத்தரமாக நீா் சூழக்கூடிய பகுதிகளாக 35 இடங்களும், பகுதியளவில் நீா் சூழக்கூடிய பகுதிகளாக 79 இடங்களும் தோ்வு செய்யப்பட்டு, அந்த இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத்துறை சாா்ந்த அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், 500 ஆபத்து கால நண்பா்களும், 600 முதல்நிலைப் பொறுப்பாளா்களும் தயாா் நிலையில் உள்ளனா். பேரிடா்களை முன்கூட்டியே தெரிவித்து, எச்சரிக்கை செய்யும் வகையில் நவீன கருவிகள் மூலம் மரக்காணம், வானூா் ஆகிய கடலோர வட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு வட்டங்களிலும் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களைத் தங்க வைக்க 993 தற்காலிக நிவாரண மையங்கள், 66 மாணவ, மாணவிகள் விடுதிகள் தயாா் நிலையில் உள்ளன. பொதுமக்கள் 1077 மற்றும் 04146-223265 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

இதில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT