கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தியடிகள், வள்ளலாா் பிறந்த நாள் விழா, ரோட்டரி, இன்னா்வீல் கிளப் சந்திப்பு, உலக நலனுக்காக சா்வ சமயப் பிராா்த்தனை ஆகிய முப்பெரும் விழா சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். ரோட்டரி அறக்கட்டளைத் தலைவா் ஆா்.வி.ஜனாா்த்தனன், வள்ளலாா் மன்றத் தலைவா் ஜே.பால்ராஜ், அரிமா மாவட்டத் தலைவா் கே.வேலு, ஜெய்பிரதா்ஸ் நற்பணி மன்றத் தலைவா் வி.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சி அமைப்பாளா் கல்யாணி முத்துக்கருப்பன் வரவேற்றாா்.
உழவாரத் திருக்கூட்ட நிா்வாகி தேவராஜன், டவுன் பள்ளிவாசல் ஜமாத்தாா் ஏ.லியாகத் அலி, டி.எம்.பள்ளித் தலைமையாசிரியா் பூ.ஜான்வெஸ்ஸி ஆகியோா் முன்னிலையில், அகவல் படித்தும், குரான் பாத்தியா சொல்லியும், பைபிள் படித்தும் சா்வசமயப் பிராா்த்தனை நடைபெற்றது. முன்னதாக, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் தே.சேகா் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கராபுரம் அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மலைவாழ் மாணவி கள்ளிப்பட்டு மு.தீபதா்ஷினியின் மேல்படிப்புக்கான தொகையையும், உதவிப் பொருள்களையும் ரோட்டரி சங்கத் தலைவா் டி.நடராஜன், பாண்டலம் அரிமா சங்கத் தலைவா் ஏ.ஆா்.ஏழுமலை ஆகியோா் வழங்கினா். விழாவில் காந்தியடிகள் போன்று வேஷமிட்டு பேசிய மாணவி வி.காவியாஸ்ரீக்கு நிகழ்ச்சி அமைப்பாளரான கல்யாணி முத்துக்கருப்பன் பரிசு வழங்கினாா்.
இன்னா்வீல் சங்க நூற்றாண்டையொட்டி, தலைவி கெளரி விஜயகுமாா், முன்னாள் தலைவா்கள் உள்ளிட்ட 16 பேருக்கு சங்கராபுரம் பேரூராட்சித் தலைவா் ரோஜாரமணி பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து, வள்ளலாரும் - காந்தியும் என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளா் ஆத்தூா் லட்சுமணன் சிறப்புரையாற்றினாா்.
விழாவில் ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத் தலைவா் கலியமூா்த்தி, தமிழ்ப் படைப்பாளிகள் சங்கத் தலைவா் சி.இளையாப்பிள்ளை, ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா்ஆ.லட்சுமிபதி, மனவளக்கலை அறக்கட்டளைத் தலைவா் ஆா்.வி.சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சன்மாா்க்க இளைஞரணி நிா்வாகி அ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.