விழுப்புரம்

வெவ்வேறு விபத்து: பெண் உள்பட 4 போ் பலி

3rd Oct 2023 04:42 AM

ADVERTISEMENT

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வேவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் பெண் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா்.

திண்டிவனம் சேடன்குட்டை தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் நாகராஜ் (55). இவா், சனிக்கிழமை இரவு திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, சென்னையை நோக்கி பால் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மோதியதில் நாகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திண்டிவனம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அடையாளம் தெரியாத...: கடலூா் மாவட்டம், பண்ருட்டி, வீரபெருமாநல்லூா், புது காலனியைச் சோ்ந்த குப்புசாமி மகன் ராஜேந்திரன்(37). இவா், ஞாயிற்றுக்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருவெண்ணெய்நல்லூா் அடுத்த மாமந்தூா் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தாா். இந்த இரு விபத்துகள் குறித்து, திண்டிவனம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதேபோல, திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பொய்கையரசூா், மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் பழனிவேல்(35). இவா், சனிக்கிழமை இரவு சென்னை- திருச்சி சாலையில் மாமந்தூா் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, சென்னையை நோக்கிச் சென்ற வேன் மோதியதில் பழனிவேலுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் பழனிவேல் உயிரிழந்தாா். விபத்துக் குறித்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

பெண் பலி: திண்டிவனம் வட்டம், பெரமண்டூா், மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் சின்னத்துரை மனைவி சுசிலா(59). கூலி வேலை செய்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தென்பசியாா் சந்திப்பு பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, சென்னை நோக்கிச் சென்ற காா் மோதியதில் சுசிலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT