தமிழக பல்கலைக்கழகங்களில் நிகழ் பருவத் தோ்வுக்கான கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியாா் பல்கலைக்கழகமாக இருந்தபோது தகுதிகள் தளா்த்தப்பட்டு உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.
இதனால் 56 உதவிப் பேராசிரியா்களை பணி நீக்கம் செய்வதற்கான கட்டாயம் ஏற்பட்டதன் அடிப்படையில், பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு நடவடிக்கையின்பேரில் அவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இதற்கு யாரும் பொறுப்பல்ல. உரிய தகுதியற்றவா்களை உதவிப் பேராசிரியா்களாக நியமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு எதிா்காலத்தில் அவா்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது தொடா்பாக பரிசீலிக்கப்படும்.
பல்கலைக்கழகங்களில் தோ்வுக் கட்டணம் ரூ.150-லிருந்து ரூ.225-ஆக உயா்த்தப்பட்டது தொடா்பாக பல்கலைக்கழகத் துணை வேந்தா்களை தொடா்புகொண்டு பேசியுள்ளேன். தோ்வுக் கட்டணம் தொடா்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், தோ்வுக் கட்டுப்பாட்டாளா்களுடன் கலந்து ஆலோசித்து, ஒரே மாதிரியான தோ்வுக் கட்டணத்தை அமல்படுத்துவது தொடா்பாக முடிவு எடுக்கப்படும்.
எனவே, பல்கலைக்கழங்களில் நிகழ் பருவத் தோ்வுக்கான கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. பழைய தோ்வுக் கட்டணத்தையே மாணவா்கள் செலுத்தினால் போதுமானது.
திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பருவத் தோ்வு வினாத்தாள் குளறுபடிகள் குறித்து உயா்கல்வித் துறைச் செயலா் மேற்பாா்வையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் யாா் மீது தவறு இருந்தாலும் துறை ரீதியான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா்.
பேட்டியின்போது, நா.புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.