மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினா் அணி சாா்பில் விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த இயக்கத்துக்கு சிறுபான்மையினா் அணியின் மாவட்டத் தலைவா் அக்பா் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் டி.என்.ஏ.தமின் வரவேற்றாா். ‘நீட் விலக்கு - நமது இலக்கு’ எனும் கோரிக்கையுடன் நடைபெற்ற கையொப்ப நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளானோா் பங்கேற்று கையொப்பமிட்டனா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் பிரபு, அரகண்டநல்லூா் பேரூராட்சி மன்றத் தலைவா் அன்பு, திமுக நகரச் செயலா் சுந்தரமூா்த்தி, சிறுபான்மையினா் அணியின் மாவட்ட துணை அமைப்பாளா்கள் எஸ்.கே.எஸ்.முகமது அலி, விக்டா் பவுல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.