விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை ரகங்கள், உரங்கள் தேவையான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் பயிா் சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதை ரகங்கள், உளுந்து விதைகள், நிலக்கடலை விதைகள், கம்பு விதைகள்,கேழ்வரகு விதைகள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல விவசாயப் பணிகளுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
உரங்கள் சரியான விலையில் விற்கப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் வேளாண்மை அலுவலா்களைக் கொண்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.