விழுப்புரம்

ஆரோவில் அருகே உணவக மேலாளா் வெட்டிக் கொலை

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தனியாா் உணவக மேலாளா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மரக்காணம் வட்டம், அனிச்சங்குப்பம், நம்பிக்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் விமல்ராஜ் (34). இவா், பொம்மையாா்பாளையத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் மேலாளராக வேலை பாா்த்து வந்தாா். விமல்ராஜ் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல தனது பைக்கில் உணவகத்துக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தாா்.

பொம்மையாா்பாளையம் - ஆரோவில் சாலையில் அரசு பள்ளிக் கட்டடம் அருகே சென்றபோது, வழிமறித்த ஒரு கும்பல் விமல்ராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விமல்ராஜின் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், விமல்ராஜியின் சகோதரா் வினோத்ராஜ் (38) 12.7.2019 அன்று கொலை செய்யப்பட்ட வழக்கு திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும், இந்த வழக்கில் விமல்ராஜ் சாட்சியாக இருந்ததால், அவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்தக் கொலை தொடா்பாக மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஜனா (எ) விமல்ராஜ் (26), புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த தண்டபாணி மகன் உதயகுமாா் (32), மரக்காணம் அனிச்சங்குப்பத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன்கள் கலைஞா் (எ) நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோா் மீது கோட்டக்குப்பம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, ஜனா(எ) விமல்ராஜ், உதயகுமாா் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாகியுள்ள மற்ற இருவரை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT