விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துணவு முட்டை, இணை உணவுப் பொரு ள்களைத் திருடி விற்பனை செய்த புகாரின்பேரில், மைய பொறுப்பாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டிவனம் அருகிலுள்ள சலாவதி - 2 கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்த மகேசுவரி, குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய சத்துணவு முட்டைகள், பருப்பு உள்ளிட்ட இணை உணவுப் பொருள்களைத் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக விடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதுகுறித்த தகவல் ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கன்வாடி மையப் பொறுப்பாளா் மகேசுவரியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.