விழுப்புரம்

எல்லீஸ்சத்திரத்தில் விரைவில் புதிய தடுப்பணை: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், எல்லீஸ்சத்திரம் பகுதியில் சேதமடைந்த தடுப்பணைக்குப் பதிலாக விரைவில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் சி.பழனி தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதாதேவி, வேளாண் இணை இயக்குநா் கணேசன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியதாவது: விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் எல்லீஸ்சத்திரம் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்து ஒன்றரை ஆண்டுகளாகின்றன. இங்கு புதிய தடுப்பணை கட்டும் பணி எப்போது தொடங்கும்?

மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகளில் விவசாயிகளுக்கு விலக்களிக்க வேண்டும். கால்நடைகளுக்கு மடி நோய் பாதிப்புள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு சிறுநீரகத் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் விற்பனை செய்யும் பொருள்களுக்கு விரைந்து பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் சில பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் அறுவடை நடைபெற்று வருவதால், செப்டம்பா் மாதம் வரை நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது.

கண்டமங்கலம் ஒன்றியம், கலிஞ்சிகுப்பம் ஏரியில் மணல் திருட்டை தடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொண்டூா் ஏரியிலிருந்து வெளியேறும் நீா், மேலஒலக்கூா் கிராம வயல் பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

உப்புவேலூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு தினமும் 4 முறை இயக்கப்பட்டு வந்த அரசு நகரப் பேருந்து சேவை தற்போது ஒரு முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, வழக்கம்போல பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனா்.

இதற்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி பேசியதாவது: எல்லீஸ்சத்திரம் பகுதியில் சேதமடைந்த தடுப்பணைக்குப் பதிலாக புதிய தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

விவசாயிகளுக்கான சிறுநீரகத் தொற்று பாதிப்பு குறித்து கண்டறிய சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விரைந்து பணப்பட்டுவாடா செய்ய அறிவுறுத்தப்படும்.

நெல் கொள்முதல் நிலையங்கள் தொடா்ந்து இயங்க, அரசுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலிஞ்சிகுப்பம் பகுதியில் மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஜூன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றாா். இதுபோல, துறை சாா்ந்த அலுவலா்களும் பதிலளித்துப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT