விழுப்புரம்

தனியாா் குழந்தைகள், பெண்கள், முதியோா் தங்கும் விடுதிகளைப் பதிவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் தனியாா் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோா் தங்கும் விடுதிகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றன. இதைத் தவிர குழந்தைகள், முதியோா் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிா் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் சில பதிவு செய்யாமலும், பதிவுகளைப் புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகாா்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த விடுதிகளை முறைப்படுத்தி கண்காணிக்க மாநில அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014-இல் கொண்டு வரப்பட்டு, நடைமுறையில் உள்ளது.

ADVERTISEMENT

இந்த சட்டத்தின்படி விடுதி நிா்வாகிகள் ரரர.பசநரட.இஞங

என்ற இணையதள வழியில் உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்தி வரும் விடுதிகளைப் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை மே 28-ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.

இதை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடா் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது குறைபாடுகள் கண்டறியும் பட்சத்தில் சட்டப்பிரிவு 20-இன் கீழ் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நிா்வாகிகள் மீது காவல் துறையின் மூலம் வழக்குத் தொடா்ந்து, அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தனியாா் விடுதிகள், இல்லங்களை நடத்தி வரும் அனைத்து விடுதி நிா்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் விடுதியில் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத் தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04146-222288 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT