விழுப்புரம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பெண் எஸ்.பி.யிடமும், 68 சாட்சிகளிடமும் விசாரணை நிறைவடைந்துள்ளது. இதைத் தொடா்ந்து, தற்போது மூன்று தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. ஆஜரானாா். அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹேமராஜன், தங்கள் தரப்பு வாதத்தை 90 சதவீதம் நிறைவு செய்தாா். தொடா்ந்து அரசுத் தரப்பு, முன்னாள் சிறப்பு டிஜிபி வாதம் நடைபெற்றது. இந்த தரப்பு வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எம். புஷ்பராணி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT