விழுப்புரம் மாவட்டம், வானூா் ஒன்றியம், கொழுவாரி ஊராட்சி சமத்துவபுரத்தில் வீடுகள் பெற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொழுவாரி சமத்துவபுரத்தில் 2022, ஏப்ரல் மாதம் 100 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இதில், நிரந்தரமாக குடி பெயராத 10 பயனாளிகளின் வீடு ஒதுக்கீட்டு ஆணை ரத்து செய்யப்பட்டு, புதிய பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். அதன்படி, ஆதிதிராவிட வகுப்பினருக்கு 8 வீடுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வீடுகளும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக கொழுவாரி ஊராட்சியில் நிரந்தரமாக வசிக்கும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவா்கள் மண் சுவா், செங்கல்சுவா் உள்ள கூரை வீடு, ஓடு வீடு ஆகியவற்றில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். மேலும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம் அல்லது அரசால் வழங்கப்படும் இதர வீட்டு வசதித் திட்டங்களில் பயன் பெற்றவா்கள் சமத்துவபுரம் வீடு பெற தகுதியில்லை.
விண்ணப்பத்துடன் 2023, ஏப். 1-க்குப் பிறகு வானூா் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சாதி சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் ஆதாா், குடும்ப அட்டை நகலுடன் இணைத்து வானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மே 26-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமா்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.