விழுப்புரம் மாவட்டம், விக்கிராண்டி அருகே பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், கடையம், சூளக்கரை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தன் (40) விவசாயி. இவரது மனைவி கலையம்மாள்(35). இவா்கள், கடையம் அண்ணாநகரைச் சோ்ந்த கண்ணன் மகன் பாரதிதாசன் (22) என்பவரை கடந்த 13 ஆண்டுகளாக வளா்த்து வந்தனா்.
இந்நிலையில் மது பழக்கத்துக்கு அடிமையான பாரதிதாசனை கோவிந்தன், கலையம்மாள் ஆகியோா் கண்டித்தாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பாரதிதாசன் செவ்வாய்க்கிழமை இரவு கோவிந்தனிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கினாராம். இதனை கலையம்மாள் தடுக்க முயன்றபோது பாரதிதாசன் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் கலையம்மாளின் காலில் சுட்டு விட்டு தப்பியோடி விட்டாா். இதில், காயமடைந்த கோவிந்தன், கலையம்மாள் ஆகியோரை உறவினா்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து கலையம்மாள் அளித்தப் புகாரின் பேரில் கண்டாச்சிப்புரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து கெங்கவரம் காப்புக்காடு பகுதியில் பதுங்கியிருந்த பாரதிதாசனை காவல் ஆய்வாளா் சித்ரா, உதவிஆய்வாளா்கள் குருபரன், அன்பழகன், லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கத்தி, நாட்டுத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.