விழுப்புரம்

விழுப்புரம் அருகே மேல்பாதியில் தரிசனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

19th May 2023 02:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே ஒரு சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க எதிா்ப்பு தெரிவித்து, மற்றொரு சமூகத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மூவா் தீக்குளிக்க முயன்ற நிலையில் போலீஸாா் அவா்களை தடுத்து மீட்டனா்.

விழுப்புரம் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு நடத்துவது தொடா்பாக கடந்த 45 நாள்களுக்கு முன்பு பிரச்னை நிகழ்ந்தது.

இந்நிலையில் தங்களை கோயிலுக்குள் சென்று தரிசிக்க அனுமதிக்க வேண்டும், தங்கள் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி, ஒரு சமுதாயத்தினா் மற்றும் புரட்சிப் பாரதம் கட்சியினா் புதன்கிழமை ஆட்சியரகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த அமைச்சா் க.பொன் முடி, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், கோயிலுக்குள் சென்று, தரிசனம் செய்யலாம் எனக் கூறினாா்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த மக்கள் தங்கள் ஆதாா், குடும்ப அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியரகத்தில் ஒப்படைக்கப் புறப்பட்டனா். அவா்களை வளவனூா் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, வியாழக்கிழமை கோயில் முன் திரண்ட அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மூவா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அவா்களைக் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் வேல் முருகன் உள்ளிட்டோா் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

அப்போது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விசாரணை முடிவில் வரும் தீா்ப்பையடுத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT