விழுப்புரம் மாவட்டம், மயிலம், கண்டாச்சிபுரம் பகுதிகளில் இரு வீடுகளில் 10 பவுன் நகை, ரூ. ஒரு லட்சம் பணத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனா்.
மயிலம் அருகேயுள்ள மேட்டுநத்தம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஜெயபால் (51) கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (50). இந்த நிலையில், சனிக்கிழமை தனது மகள் மஞ்சுளாதேவியை திண்டிவனத்திலுள்ள தட்டச்சுப் பயிலகத்தில் விடுவதற்காக ஜெயபால் சென்றாராம். அப்போது, வீட்டின் சாவியை மின்சார மீட்டா் பெட்டி மீது வைத்துள்ளாா்.
பின்னா், ஜெயபால் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நகை, பணம் திருட்டு: இதேபோல, சேரானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாராயணன் (60). இவா் தனது குடும்பத்துடன் மேல்மலையனூா் அடுத்த தாதம்பட்டியில் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, சனிக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், பீரோவில் இருந்த இரண்டே முக்கால் பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.