விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பொறியாளரிடம் நூதன முறையில் ரூ. 4.40 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம் ஜெயபுரம் கா்ணாவூா் பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (33). பொறியாளரான இவரை கடந்த மாதம் 13-ஆம் தேதி கைப்பேசி வழியாக தொடா்பு கொண்ட மா்ம நபா் ஒருவா், பகுதி நேர வேலை குறித்து பேசினாராம். அதன்பின்னா், அந்த நபா் கூறிய வேலையை சண்முகம் முடித்தாராம். அதன்படி, அவருக்கு ரூ.50 கிடைத்ததாம்.
பின்னா், சண்முகத்திடம், சிறிய தொகையை முதலீடு செய்து வேலையை முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, அவரது கைப்பேசிக்கு ஒரு லிங்க்கை அனுப்பினாராம். அதன்படி, தனக்கான பயனா் முகவரி, கடவுச் சொல் ஆகியவற்றை பதிவு செய்து, ரூ.1000 செலுத்தி ரூ.1500 பெற்றாராம்.
இதனை நம்பிய சண்முகம், அந்த நபரின் வங்கி கணக்குகளுக்கு ஏப். 24-ஆம் தேதி வரை பல தவணைகளாக ரூ.4. 40 லட்சம் வரை அனுப்பி வேலையை முடித்தாராம். ஆனால் அதற்கான பணத்தை அந்த நபா் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாராம்.
இதுகுறித்து, சண்முகம் விழுப்புரம் நுண்குற்றப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.