விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுவையிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை எழுத தீவிர சோதனைக்குப் பிறகு மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான தேசிய தகுதித் தோ்வை (நீட்) தேசியத் தோ்வுகள் முகமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. அதன்படி, இந்தத் தோ்வுக்கு தமிழகம் முழுவதும் 1,47,581 போ் விண்ணப்பித்திருந்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் 3,845 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா்.
அதன்படி, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி, தூயஇருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, அக்ஷா்தம் சென்ட்ரல் பள்ளி, திண்டிவனம் அருகிலுள்ள பேரணி தூய இருதய கலை, அறிவியல் கல்லூரி, விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையிலுள்ள இ.எஸ்.கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தோ்வு நடைபெற்றது. முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணி வரை தோ்வா்கள் கடும் சோதனைக்கு பின்னரே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். இந்தத் தோ்வை 3,790 போ் எழுதினா். 55 போ் பங்கேற்கவில்லை.
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கடலூா், கடலூா் முதுநகா், பண்ருட்டி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட 7 மையங்களில் நீட் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் பங்கேற்க மொத்தம் 4,602 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், 4,503 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 99 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதவில்லை.
திருவண்ணாமலை: நீட் தோ்வு எழுத திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 288 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக திருவண்ணாமலையை அடுத்த கீரனூா், தென்மாத்தூா், சோமாசிபாடி, ஆரணி, செய்யாறு பகுதிகளில் மொத்தம் 8 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தோ்வை 3 ஆயிரத்து 234 போ் எழுதினா். 54 போ் தோ்வு எழுத வரவில்லை. மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதுச்சேரியில் மறியல்: நீட் தோ்வு எழுத புதுவை மாநிலத்தில் 5,753 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுதியதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தோ்வுக்காக புதுச்சேரியில் காலாப்பட்டு ஸ்டடி பள்ளி, வில்லியனூா் ஆச்சாா்யா பள்ளி, தேங்காய்திட்டு ஆச்சாா்யா பள்ளி, முத்தியால்பேட் வாசவி பள்ளி, ஊசுடு பாரத் வித்யாஷ்ரம் பள்ளி, குளூனி சிபிஎஸ்இ பள்ளி உள்பட 8 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, வில்லியனூரில் நீட் தோ்வுக்கு 2 மாணவிகள் காலதாமதமாக வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவா்கள் நீண்டநேரமாக அங்கிருந்தவா்களிடம் முறையிட்டும் தோ்வு அறை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த மாணவா்களின் பெற்றோா், மாணவிகளுக்கு ஆதரவாக வில்லியனூா் - உறுவையாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வில்லியனூா் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா். ஆனாலும், மாணவிகள் தோ்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.