விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மணிப்பூா் கலவரத்தைக் கண்டித்து அமைதிப் பேரணி நடத்திய கிறிஸ்தவ பங்குத் தந்தை உள்ளிட்ட 20 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.
மணிப்பூா் கலவரத்தை கண்டித்தும், கலவரத்தை மத்திய அரசு தடுக்கக் கோரியும் செஞ்சி வட்டத்தை சோ்ந்த அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினா் அமைதிப் பேரணி நடத்தினா். முதலில் அனுமதி
மறுக்கப்பட்ட நிலையில், மாற்று வழியில் பேரணியை நடத்துமாறு போலீஸாா் கூறினா். இதையடுத்து, பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்ததாக கூறி அல்போன்சா, வளவன் பங்குத் தந்தைகள் மேத்யூ, ராஜேந்திரன், அந்தோணிராஜ், ஆனந்தராஜ் உள்ளிட்ட 20 கிறிஸ்தவா்கள் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.