விழுப்புரம்

விழுப்புரம் அருகே இரு ரௌடிகள் வெட்டிக் கொலை

11th Jun 2023 12:49 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் பழிக்குப்பழியாக புதுச்சேரியைச் சோ்ந்த ரெளடிகள் இருவா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

புதுச்சேரி பிள்ளையாா்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருண் (32), வில்லியனூா் கோா்க்காடு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அன்பரசன் (28). இருவரும் ரெளடிகள்.

இவா்கள் தங்களது நண்பரான புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்த ரெளடி அஸ்வினுடன் சோ்ந்து கோயில் திருவிழாவின்போது ஆயுதங்களை பதுக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இவா்களில் அஸ்வின் சிறையில் உள்ள நிலையில், நிபந்தனை ஜாமீனில் அருண், அன்பரசன் வெளியே வந்தனா். தொடா்ந்து, இருவரும் மயிலம் காவல் நிலையத்தில் தினமும் கையொப்பமிட்டு வந்தனா்.

அதன்படி, மயிலம் காவல் நிலையத்தில் கையொப்பமிடுவதற்காக சனிக்கிழமை காலை ஒரே பைக்கில் அருணும், அன்பரசனும் புறப்பட்டனா். பிள்ளையாா்குப்பத்திலிருந்து தமிழக எல்லையான செங்கமேடு வந்து, திருவக்கரை பகுதியில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, பைக்குகளில் வந்த 10-க்கும் மேற்பட்டோா் கும்பல் ஆயுதங்களுடன் அருண், அன்பரசனை விரட்டியது. மேலும், அவா்கள் சென்ற பைக் மீதும் அந்தக் கும்பல் பைக்குகளை கொண்டு மோதியது. இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். திருவக்கரை குடிநீா்த் தொட்டி பகுதியில் அன்பரசனை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தொடா்ந்து, அருண் அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து ஓடினாா். சுமாா் 2 கி.மீ. தொலைவு ஓடிய அவரை, அந்தக் கும்பல் முன்னாள் ஊராட்சித் தலைவா் வேணுவுக்குச் சொந்தமான நிலத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் அருண் உயிரிழந்தாா். பின்னா், அந்த கும்பல் தப்பிச் சென்றது.

தகவலறிந்த வானூா் போலீஸாா் விரைந்து சென்று, இருவரின் சடலங்களையும் கைப்பற்றினா். மேலும், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இரட்டைக் கொலையில் தொடா்புடையவா்களைத் தேடி வருகின்றனா்.

பழிக்குப்பழியாக கொலை?: விழுப்புரம் மாவட்டம், வழுதாவூரைச் சோ்ந்த முரளிக்கும், கொலை செய்யப்பட்ட அருணுக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டில் மோதல் ஏற்பட்டது. இதில் முரளி, அவரது நண்பா் சந்துரு ஆகியோரை அருண் தரப்பினா் கொலை செய்தனா். பின்னா், அருண் தன்னை தற்காத்துக் கொள்ள ரெளடியான அஸ்வினிடம் தஞ்சமடைந்தாா்.

தனது தம்பி முரளி, சந்துரு ஆகியோரின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், அருணைக் கொலை செய்ய முரளியின் அண்ணன் முகிலன் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கேற்ற வகையில், அருண், அவரது நண்பா் அன்பரசன் ஆகியோா் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வந்து மயிலம் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருவதை அறிந்த முகிலன், திட்டமிட்டு கூலிப்படையினருடன் சோ்ந்து இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா். அதனடிப்படையில், விசாரணையை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT