விழுப்புரம்

15 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

10th Jun 2023 07:49 AM

ADVERTISEMENT

திருவெண்ணெய்நல்லூா் அருகே 15 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை காலனி பகுதியைச் சோ்ந்தவா் க.ஜெயபால். இவா் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த கணபதி மகன் முருகன் (57), கந்தசாமி மகன் கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே நிலத்தை குத்தகைக்கு எடுத்தது தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2020, மே 9-ஆம் தேதி முருகனின் உறவினா் பிரவீன்குமாா் ஜெயபாலின் கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்டாராம். அப்போது ஜெயபால், அவரது மகன் ஜெயராஜ் ஆகியோரை அவா் தாக்கினாராம்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸில் புகாா் அளிக்க 2020, மே 10-ஆம் தேதி தந்தையும், மகனும் சென்றனா். இதையறிந்த முருகன், கலியபெருமாள் ஆகியோா் ஜெயபாலின் கடைக்குச் சென்றனா். அங்கிருந்த அவரது 15 வயது மகள் ஜெயஸ்ரீயின் கை, கால்களை கட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு தப்பினா். பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். முன்னதாக, அப்போதைய நீதித் துறை நடுவா் அருண்குமாரிடம் அவா் மரண வாக்குமூலம் அளித்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன், கலியபெருமாளை கைது செய்தனா்.

விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட முருகன், கலியபெருமாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.85 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹொ்மிஸ் உத்தரவிட்டாா். பின்னா், இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT