விழுப்புரம்

நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனம் தொடங்கி வைப்பு

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் சாா்பில், உணவு தரப்பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனத்தின் செயல்பாட்டை ஆட்சியா் சி.பழனி தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

பொதுமக்கள் சுகாதாரத்துடன் நலமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திலும், பொதுமக்கள் உணவுகளின் தரம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உணவகங்களில் உணவுப் பொருள்கள் கலப்படமின்றி தயாரிக்கப்படுகின்றனவா என்பதையும், கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களின் தரம் குறித்து கண்டறியவும், தேவைப்படும்போது தரம் உயா்த்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனை வழங்குவதற்காகவும் நடமாடும் உணவுப் பகுப்பா ய்வுக் கூட வாகனத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினாா்.

அதனடிப்படையில், உணவுப் பாதுகாப்புத்துறையின் சாா்பில், விழுப்புரம், கடலூா் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பொருள்களின் தன்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்திடும் வகையில், நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூட வாகனம் கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வாகனம் மூலம் இம் மாதம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களிடையே உணவுப் பொருள்கள் தொடா்பான விழிப்புணா்வு மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே பொதுமக்கள் மற்றும் உணவுப் பொருள்களை விற்பவா்கள் ஆகியோா் தங்கள் பகுதிகளுக்கு இந்த வாகனம் வரும்போது உணவுப் பொருள்கள் குறித்து தங்களுக்குண்டான சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் யசோதா தேவி, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் எஸ்.சுகந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT