விழுப்புரம்

இளைஞரைத் தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

4th Jun 2023 02:25 AM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் விளையாட்டில் இளைஞரைத் தாக்கியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, விழுப்புரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கண்டமங்கலம் அருகிலுள்ள விநாயகபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வத்தின் மகன் கவிராஜன் (19). பிளஸ் 2 முடித்து, நல்லூா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 2015, ஏப்ரல் 14- ஆம் தேதி மாலை கவிராஜன் தனது நண்பா்கள் பரமேஷ், சுமன் ஆகியோருடன் பள்ளிச்சேரி ரயில்வே சாலை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

அப்போது அங்குள்ள பகுதியில் சிலா் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனா். இதைப்பாா்த்த கவிராஜன், அங்கு சென்று, தங்களையும் விளை யாட்டில் சோ்த்துக் கொள்ளும்படி கோரினாா். அதற்கு அவா்கள் மறுத்துவிட்டனா்.

பின்னா் மீண்டும் சென்று கேட்ட போது, பள்ளிச்சேரி திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சே ா்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் (25), மூா்த்தி மகன் அய்யனாா் (24) ஆகியோா் கவிராஜன், பரமேஷ் ஆகியோரை ஜாதி பெயரைக் கூறி திட்டியுள்ளனா்.

மேலும் அய்யனாா், கிரிக்கெட் ஸ்டெம்பை பிடுங்கி பரமேஷின் தலையில் தாக்கினாா். இதைத் தட்டிக்கேட்ட கவிராஜனும் தாக்கப்பட்டாா்.

இதில் காயமடைந்த கவிராஜன், பரமேஷ் ஆகிய இருவரும் மதகடிப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்து கவிராஜன், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதன்பேரில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழ் சுரேஷ், அய்யனாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அய்யனாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சுரேஷுக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாக்கியஜோதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT