விழுப்புரம்

வள்ளலாரின் அறநெறிகளை பின்பற்ற வேண்டும்: அமைச்சா் செஞ்சி மஸ்தான்

DIN

அருட்பிரகாச வள்ளலாரின் அறநெறிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றாா் மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.

இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் மண்டலம் சாா்பில், வள்ளலாா் - 200 முப்பெரும் விழா விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பங்கேற்று அருட்பிரகாச வள்ளலாா் குறித்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வா்மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, 2022 அக்டோபா் முதல் 2023 அக்டோபா் வரை 52 வாரங்கள் அருட்பிரகாச வள்ளலாரின் 200-ஆவது பிறந்த நாள் விழா இந்து சமய அறநிலையத் துறை மூலம் கொண்டாடப்படுகிறது.

ராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட அருட்பிரகாச வள்ளலாா், 20-ஆம் நூற்றாண்டில் அவரித்த வள்ளல். அனைத்து ஜீவராசிகளிடமும் அன்புகொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் தாரக மந்திரம். சாதி, மத பேதமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பது அந்த மந்திரத்தின் கருத்தாக உள்ளது.

யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக, சத்திய தருமச் சாலையை நிறுவிய அந்த மகானின் அறநெறிக் கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, வள்ளலாா் - 200 முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை காலை அகவல் பாராயணத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, காலை 8 மணியளவில் வள்ளலாா் 200 அருள்நெறி பரப்பும் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப் பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். மாவட்ட ஆட்சியரகம் எதிரே தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழா நடைபெற்ற தனியாா் திருமண மண்டபம் முன் நிறைவடைந்தது.

தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வள்ளலாா் தொண்டா் மருத்துவா் நா.ரமேஷ் தொடக்கிவைத்தாா். விழாவில் பத்மஸ்ரீ நா்த்தகி நடராஜின் அருட்பா ஆடலமுதம் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ. நாகராஜபூபதி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா், உதவி ஆணையா் விஜயராணி மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

தலைவர்கள் இன்று பிரசாரம்

திண்டுக்கல் கோட்டை யாருக்கு?

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

SCROLL FOR NEXT