விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சாலையோரத் தடுப்பில் வேன் மோதியதில் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
புதுச்சேரி சாரம் பகுதியைச் சோ்ந்த வீரப்பன் மகன் சுரேஷ் (60), இவரது மனைவி தமிழரசி (59), குருநாதன் மகன் விக்னேசுவரன்(35), தியாப் மகன் அலுயன் (36), இவரது மனைவி வினோதினி (35), இவா்களது மகள் விநாலி (ஒன்றரை வயது) ஆகிய 6 பேரும் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தனா்.
இவா்களை புதுச்சேரி சாரம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் சங்கா் (56), குருநாதன் மனைவி சுஜாதா (62), செல்வமணி மகன் சுகந்தன் (38) ஆகிய மூவரும் விமான நிலையம் சென்று வேனில் அழைத்து வந்தனா். வேனை புதுச்சேரியைச் சோ்ந்த துரை ஓட்டி வந்தாா்.
இவா்கள் வந்த வேன் விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகிலுள்ள கிளியனூா் பகுதியில் திண்டிவனம் - புதுச்சேரி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரமிருந்த தடுப்பு மீது மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். காயமடைந்த 10 பேரையும் போலீஸாா் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய சுரேஷ், குழந்தை விநாலி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மேலும், சுரேஷின் மனைவி தமிழரசி உள்ளிட்ட மூவா் கவலைக்கிடமான நிலையில் உள்ளனா். விபத்து குறித்து வேன் ஓட்டுநரான துரை மீது கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.