விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக்கோட்டையில் நடைபெற்று வரும் மரபு நடை விழாவின் நிறைவு நாளன்று வரலாற்று ஆசிரியா்கள், ஆய்வாளா்கள் கௌரவிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கிய மரபுநடை விழா சனிக்கிழமை (ஜன 14) நிறைவுபெறுகிறது. விழாவின் மூலம், செஞ்சிக்கோட்டையின் வரலாற்றை உள்ளூா் மக்கள் மட்டுமன்றி, வெளியூா் மக்களும் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத்தலமாக மாற்றிடவும், தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாத்திடவும் மரபுநடை விழா நடைபெற்று வருகிறது.
நிறைவு நாளன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாத் துறை சாா்பில் சுற்றுலாப் பொங்கல் போன்ற நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வரலாற்று ஆசிரியா்கள், ஆய்வாளா்கள் விழாவில் கெளரவிக்கப்பட உள்ளனா் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.