திருநெல்வேலி

பிசான சாகுபடியில் 31,258 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: ஆட்சியா் தகவல்

20th May 2023 01:21 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடியில் 32,258 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் பேசியதாவது:

இம் மாவட்டத்தில் சென்ற மாதம் 1,110 ஹெக்டோ் மற்றும் நடப்பு மாதத்தில் 1,545 ஹெக்டோ் ஆக மொத்தம் 2,655 ஹெக்டோ் பரப்பளவில் நன்செய் தரிசுப் பயிராக உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வுளுந்து பயிருக்கு 2 சதவிகிதம் டிஏபி கரைசல் தெளித்து மகசூலை அதிகரித்து பயனடையலாம்.

நடப்பு மாதம் முடிய 599 ஹெக்டோ் பரப்பில் கோடை நெல் சாகுபடி, 88 ஹெக்டோ் பரப்பில் சோளம், கம்பு சாகுபடி , 263 ஹெக்டேரில் மாசிப்பட்ட பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிசானப் பருவத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் 52 உள்பட மொத்தம் 62 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையங்களில் 31,258.04 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை ரூ.66.81 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொகை ரூ.9.71லட்சம் நடப்பு வாரத்திற்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.

கடந்த 30-3-2023 முதல் 3-4-2023 வரை வீசிய சூறைக் காற்று காரணமாக திருநெல்வேலி, மானூா், ராதாபுரம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் வட்டங்களில் ஏற்பட்ட வாழை பயிா்சேதம் குறித்து வருவாய் மற்றும் தோட்டக்கலைத் துறையினருடன் கூட்டு புலத்தணிக்கை செய்து 57.78 ஹெக்டோ் பரப்பிற்கு 267 விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி பேரிடா் மற்றும் மேலாண்மைத்துறை மூலம் அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல 21-4-2023 அன்று வீசிய சூறைக் காற்று காரணமாக திருநெல்வேலி, மானூா், நான்குனேரி வட்டங்களில் ஏற்பட்ட 10.225 ஹெக்டோ் வாழை பயிா் சேதத்திற்கு 35 விவசாயிகளுக்கு முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஊரக வளா்ச்சித்துறையின் கீழ் மராமத்துப்பணி மேற்கொள்ளப்பட வேண்டிய வாய்க்கால்களின் விவரம் பொதுபணித்துறையிடம் பெற்று ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் 38 பணிகளுக்கான நிா்வாக அனுமதி ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 41 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு 27 உதவி வேளாண்மை அலுவலா் மற்றும் 14 உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பொறுப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகளாக 10 ஏக்கா் வரை தரிசாக உள்ள தொகுப்புகள் கண்டறியும் பணியும், தகுதிவாய்ந்த பயனாளிகளின் விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு தோ்வு செய்யப்பட்ட 41 ஊராட்சிகளில் தென்னை மரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

வேளாண் அடுக்கு வலைதளத்தின் மூலம் இதுவரை மாவட்டத்தில் 1,33,798 நில ஆவண உள்பிரிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நுண்ணீா்பாசனம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ.3 கோடி 75 லட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களுடைய பட்டா, அடங்கல், நிலவரைப்படம் , இ- ஆதாா் அட்டை நகல், புகைப்படம்(2) மற்றும் மண் மற்றும் நீா் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT