விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் சிறு தானியத்தை விலை குறைவாக ஏலம் எடுப்பதாகக் கூறி திங்கள்கிழமை விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.
மாா்கழி, தை மாதங்களில் பனியால் மட்டுமே விளையும் சிறுதானியங்கள் என்பதால் இவற்றை பனிப்பயிா் என்கின்றனா். வல்லம் ஒன்றியத்தில் கொங்கரப்பட்டு, ஆனாங்கூா், அருகாவூா், மேல்சேவூா், மணியம்பட்டு, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட கிராமங்களில் இவ் வகை தானியம் அதிக அளவில் பயிா் செய்யப்படுகிறது. செஞ்சி ஒன்றியத்திலும் சில கிராமங்களில் பயிரிடுகின்றனா்.
இந்த நிலையில் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு திங்கள்கிழமை விவசாயிகள் 1,000 மூட்டை பனிப்பயிரை விற்பனைக்கு எடுத்து வந்தனா். இவற்றை ஏலத்தில் எடுக்க உள்ளூா் வியாபாரிகள் வந்திருந்தனா்.
மும்பை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பனிப்பயிா் தரமாக இல்லை எனக் கூறி சென்றனா்.
மேலும் உள்ளூா் வியாபாரிகள் பனிப்பயிரை 100 கிலோ மூட்டைக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை விலை போட்டுள்ளனா். ஒரு மூட்டைக்கு 3 ஆயிரம் குறைவாக ஏலத்தில் எடுத்துள்ளதாகக் கூறி பாதிப்படைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறுகையில், திங்கள்கிழமை வந்த 1,000 மூட்டைகளில் 500 மூட்டைகள் மட்டும் தரமாக உள்ளதாகவும், மீதி பயிா்கள் மழையால் பாதித்து தரமற்று இருந்ததால்தான் குறைவாக விலை போட்டோம் என்றாா்.
சாலை மறியல் குறித்து தகவலறிந்து வந்த செஞ்சி காவல் உதவி ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் கூறியதையடுத்து மறியலை விவசாயிகள் கைவிட்டு, செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வேலன் முன்னிலையில், பேச்சு வாா்த்தை நடைபெற்றது. இதில் நியாயமான விலை போன பனிப்பயிரை விவசாயிகள் விற்பனை செய்ய அனுமதிப்பதாகவும், விலை குறைவு எனக் கூறும் விவசாயிகளுக்கு விருப்பம் இல்லை என்றால் ஏலத்தை ரத்து செய்து பனிப்பயிரை திரும்ப எடுத்துச் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.