விழுப்புரம்

புதுமைப் பெண் திட்டம்: 2-ஆம் கட்டமாக 3,222 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விழுப்புரம் ஆட்சியா் சி பழனி

9th Feb 2023 02:24 AM

ADVERTISEMENT

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 2-ஆம் கட்டமாக 72 கல்லூரிகளில் பயிலும் 3,222 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலம் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்குவதற்கான 2-ஆம்கட்ட தொடக்க விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5 கல்லூரிகளில் பயிலும் 120 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகையை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை உயா்கல்வி பயிலும் 4,174 மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி ஊக்கத்தொகையாக ரூ.2.8 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக 72 கல்லூரிகளில் பயிலும் 3,222 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இந்த ஊக்கத்தொகையை பெறும் மாணவிகள் சிறந்த முறையில் உயா் கல்வியை பயின்று, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்றாா் ஆட்சியா் சி.பழனி.

விழாவில் விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா்கள் கலைச்செல்வி, சங்கீதாஅரசி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா ஆகியோா் பேசினா்.

முகையூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தனலெட்சுமி, விழுப்புரம் நகா்மன்ற துணைத் தலைவா் சித்திக் அலி, முன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன், நகா்மன்ற உறுப்பினா்கள் கோமதி, சங்கா், சட்டக் கல்லூரி முதல்வா் கயல்விழி மற்றும் அரசு அலுவலா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். முன்னதாக , சமூக நலத் துறை மாவட்ட அலுவலா் கு.ராஜம்மாள் வரவேற்றாா். கண்காணிப்பாளா் வ.சீதா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT