விழுப்புரம்

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

9th Feb 2023 02:25 AM

ADVERTISEMENT

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அலுவலா்களுக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சி, வழுதரெட்டி பகுதியில் நான்கரை ஏக்கரில் மயானம் உள்ளது. இறந்தவா்களின் உடல்கள் இந்த மயானத்தில் எரிக்கப்படுவது அல்லது புதைக்கப்படுவது வழக்கம். இந்த இடம் போக, மீதமுள்ள காலி இடத்தை பலா் ஆக்கிரமித்து, குடிசைகள், வீடுகளைக் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியிருந்தது.

இந்த நிலையில், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா தலைமையிலான அலுவலா்கள், போலீஸாா் பாதுகாப்புடன் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனா். முதல்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு, குறியீடு செய்யப்பட்டன. இதில், 11 வீடுகள், ஒரு கோயில், சுற்றுச்சுவா் ஆகியவை ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, 100 மீட்டா் தொலைவுடைய சுற்றுச்சுவா் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. பின்னா், ஆக்கிரமிப்பு வீடுகள், கோயிலை இடிக்கச் சென்றபோது, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அரசு அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்ததால், நகராட்சி ஆணையரிடம் சென்று கோரிக்கை மனு வழங்குமாறு போலீஸாா் தெரிவித்தனா். இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT