விழுப்புரம்

விழுப்புரத்தில் ரூ.2.50 கோடியில் பொழுதுபோக்குப் பூங்கா: விரைவில் பணிகள் தொடக்கம்

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2.50 கோடியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

விழுப்புரம் நகரில் பொழுதுபோக்கு வசதிகளுடன் பூங்கா அமைக்க வேண்டும் என்று நீண்டநாள்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் காலியாக இருந்த இடத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் அப்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் தற்போதைய விழுப்புரம் எம்எல்ஏவுமான இரா. லட்சுமணனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூங்கா ஏற்படுத்துவதற்காக சுற்றிலும் சமன்படுத்தப்பட்டு கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடா்ந்து சுற்றுச்சுவா், நடைபாதை தளம், இரண்டு உயா் மின் கோபுர விளக்குகளும் அமைக்கப்பட்டன. மேலும், இந்த வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அமரும் வகையிலான இருக்கைகளும் அமைக்கப்பட்டன. இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள், அரசு அலுவலா்கள் என ஏராளமானோா் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் அமா்ந்து படித்து வருகின்றனா். இருப்பினும், பூங்கா அமைப்பதற்கான திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், உள் வளாகத்தில் செடி, கொடிகள் முளைத்து மையப் பகுதி அடா்ந்து காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த த. மோகன் அரசுக்கு அனுப்பிய பரிந்துரையின்படி, கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொழுதுபோக்குப் பூங்கா பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.2.50 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விழுப்புரம் நகா்மன்றக் கூட்டத்தில் பொருளாக வைக்கப்பட்டு தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் பூங்காவைச் சுற்றிலும் புதிதாக நடைபாதைகள் அமைக்கப்படும். கூடைப்பந்து விளையாட்டு மையம், யோகா மையம், சிறுவா்களுக்கான சறுக்கு விளையாட்டு கட்டமைப்புகள், அழகிய நீரூற்றுகள், விளையாட்டு சாதனங்கள், திறந்தவெளி உடல்பயிற்சி மையத்துக்குரிய கட்டமைப்புகள், பூங்காவைச் சுற்றிலும் வண்ண விளக்குகள், கழிப்பறைகள், புல்வெளித் தரைகள் போன்ற பல்வேறு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வளாகத்தின் உள்பகுதியில் தேங்கியிருக்கும் நீரையும், செடி, கொடிகளை அகற்றியும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று இந்தப் பூங்காப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

SCROLL FOR NEXT