விழுப்புரம்

செஞ்சி-சிங்கவரம் சாலையில் மேம்பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக் கோரி சாலை மறியல்

1st Feb 2023 02:35 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி புறவழிச்சாலையின் குறுக்கே உள்ள பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக்கோரி செஞ்சி நகர பாஜகவினா் மற்றும் சிங்கவரம் கிராம விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி முதல் திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக தற்போது விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செஞ்சி நகரத்திற்குள் செல்லாமல் செஞ்சியைச் சுற்றி புறவழிச்சாலை அமைத்துள்ளனா். இதன் குறுக்கே செஞ்சியில் இருந்து சிங்கவரம், மேலச்சேரி உள்ளிட்ட 50 கிராமங்களுக்குச் செல்லும் சாலை உள்ளது. புற வழிச்சாலையை வாகனங்கள் கடந்து செல்வதற்காக பாலம் அமைத்துள்ளனா்.

ஆனால் பாலத்தின் உயரம் 5 மீட்டரும், 12 மீட்டா் அகலமும் கொண்டதாக உள்ளதால் பாலத்தை கடக்கும் கரும்பு லாரிகள் மற்றும் டிராக்டா்களுக்கு உயரம் போதுமானதாக இல்லை. கரும்பு லாரி வரும்போது பாலத்தை கடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டு 36 கி.மீ. தொலைவு சுற்றி வரவேண்டியுள்ளது.

ADVERTISEMENT

செஞ்சி அருகே செம்மேடு சா்க்கரை ஆலை உள்ளதால், பெரும்பாலான கிராமங்களில் உள்ள விவசாயிகள் கரும்பு பயிா் செய்து வருகின்றனா். இந்நிலையில் அறுவடை காலங்களில் இந்த பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே பாலத்தின் உயரத்தை 5 மீட்டரில் இருந்து குறைந்த பட்சம் 7 மீட்டா் அளவுக்கு உயா்த்தவேண்டும் என்று பாஜகவினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

ஆனால் கோரிக்கை ஏற்கப்படாதநிலையில் பாலத்தின் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து செஞ்சி நகர பாஜகவினா் மற்றும் சிங்கவரம், மேலச்சேரி உள்ளிட்ட கிராம விவசாயிகள் செஞ்சி-சிங்கவரம் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த செஞ்சி காவல் உதவி ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் இது குறித்து பேச்சு வாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இது குறித்து பேச்சு வாா்த்தை செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT