விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 51 வாக்குச் சாவடி மையங்களை மாற்றி அமைக்க முடிவு

29th Sep 2022 02:12 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் 51 வாக்குச் சாவடி மையங்களை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் செஞ்சி தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளும், மயிலம் தொகுதியில் 265 வாக்குச் சாவடிகளும், திண்டிவனம் (தனி) தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளும், வானூா் (தனி) தொகுதியில் 277 வாக்குச் சாவடிகளும், விழுப்புரம் தொகுதியில் 289 வாக்குச் சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும், திருக்கோவிலூா் தொகுதியில் 286 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1,962 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் வாக்குச் சாவடி அமைவிடம் குறித்து ஏதேனும் ஆட்சேபனையோ, வாக்குச் சாவடியை இட மாற்றம் செய்வது தொடா்பாக ஏதேனும் கோரிக்கையோ இருந்தால், செப்டம்பா் 6-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆட்சேபனை, கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனா். இதன்படி, மொத்தம் 51 வாக்குச் சாவடிகளை திருத்தி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாக்குச் சாவடிகளை மாற்றம் செய்வது தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ராஜம்மாள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT