விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் முற்றுகை

29th Sep 2022 02:09 AM

ADVERTISEMENT

சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை முறையாக நடத்த வலியுறுத்தி, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகா்ப் பகுதியில் உள்ள பாண்டியன் நகா், பானாம்பட்டு, ராகவன்பேட்டை, கிருஷ்ணா நகா், இந்திரா நகா், கம்பன் நகா், கணேஷ் நகா், காந்தி நகா் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமாா் ரூ.7 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்காக தகுதியான ஒப்பந்ததாரா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. பலரும் ஒப்பந்தப் புள்ளிகளை இணையதளம் வழியாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஒப்பந்தப்புள்ளி கோருவதை முறையாக நடத்த வலியுறுத்தி, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் புதன்கிழமை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அதிமுக நகரச் செயலா்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ் ஆகியோா் தலைமையில், நகர துணைச் செயலா் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செங்குட்டுவன், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் கோல்டு சேகா், கலை, பத்மா பாஸ்கா், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ்ராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது, சாலைப் பணிகளுக்கு ஒரு சாா்பாக ஒப்பந்தம் விடக்கூடாது. ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் ஒப்பந்தம் விட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT