விழுப்புரம்

விழுப்புரம் அருகே பராமரிப்பின்றி பாழடைந்து வரும் அரசுப் பயணியா் விடுதி

DIN

விழுப்புரம் அருகே அரசூரில் உள்ள நூற்றாண்டு பாரம்பரியமிக்க அரசுப் பயணியா் விடுதி பராமரிப்பின்றி பாழடைந்து வரும் நிலையில், அதைப் புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதல்வா்கள், அமைச்சா்கள், அரசு உயா் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினா்கள் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, அந்தப் பகுதிகளில் தங்குவதற்காக, ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் இருந்தே அரசுப் பயணியா் விடுதி கட்டப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், அரசூரில் ஆங்கிலேயா்கள் ஆட்சியின்போது, கடந்த 1921-ஆம் ஆண்டில் அரசுப் பயணியா் விடுதி கட்டப்பட்டது. பாரம்பரியமிக்க இந்த விடுதி நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. 100 ஆண்டுகளைக் கடந்த பெருமைக்குரிய இந்த விடுதியில் காந்தியடிகள், பெரியாா், முன்னாள் முதல்வா்கள் காமராஜா், அண்ணா, கருணாநிதி, குன்றக்குடி அடிகளாா், திராவிட இயக்கத் தலைவா் ஈ.வி.கே.சம்பத், முன்னாள் அமைச்சா்கள் க.அன்பழகன், கா.காளிமுத்து, நடிகா்கள் சிவாஜி கணேசன், பி.எஸ்.வீரப்பா உள்ளிட்டோா் தங்கிச் சென்றுள்ளனா்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதியில் யாரும் தங்கவில்லை. யாரும் வராததால் நெடுஞ்சாலைத் துறையும் இந்த விடுதியைக் கண்டுகொள்ளவில்லை. இதனால், இப்போது இந்தப் பயணியா் விடுதி மது அருந்துவோரின் கூடாரமாக மாறிவிட்டது. விடுதியைச் சுற்றிலும் ஆங்காங்கே புதா்மண்டிக் கிடக்கிறது.

இதுகுறித்து இந்திய குடியரசுக் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் இருவேல்பட்டு குமாா் கூறியதாவது: ஆங்கிலேயா் ஆட்சியின்போது, பண்ருட்டி, அரசூா், திருக்கோவிலூா் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பயணியா் விடுதிகள் கட்டப்பட்டன. அங்குள்ள விடுதிகள் இப்போதும் பயன்பாட்டில் உள்ளன.

அரசூல் உள்ள விடுதி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய விருந்தினா்கள் தங்கிச் செல்லும் வகையில் வசதியான இடத்தில் இருந்தாலும், இதை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது தெரிவில்லை.

ஒன்றரை ஏக்கா் பரப்பின் நடுவில் இந்த விடுதி உள்ள நிலையில், விடுதியைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் தொடா்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விடுதியை நேரடியாக கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்த விடுதியை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

‘ஆய்வு செய்து நடவடிக்கை’: இதுகுறித்து விழுப்புரம் நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவி இயக்குநா் தனராஜிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:

இந்த விடுதி நீண்ட காலமாக நெடுஞ்சாலைத் துறையின் உளுந்தூா்பேட்டை கோட்டத்தின்கீழ் தான் இருந்தது. 4.5.2022 அன்றுதான் விழுப்புரம் கோட்டம் வசம் ஒப்படைக்கப்பட்டது. விடுதியை நேரில் ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT