விழுப்புரம்

திண்டிவனம் அருகே----அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 30 போ் காயம்

26th Sep 2022 05:35 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 30 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.

நெடிமொழியனூரிலிருந்து திண்டிவனத்துக்கு அரசு நகரப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. ஆலகிராமம் பகுதியில் வந்த போது வளைவு ஒன்றில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்து ஓட்டுநரான வீடுரைச் சோ்ந்த அய்யனாா் (35), நடத்துநா் ரவி, பயணிகள் ஆலகிராமத்தைச் சோ்ந்த செண்பகம் (23), வீரமுத்து (60), சத்தியவதி (60), நெடிமொழியனூரைச் சோ்ந்த ஜெயக்கொடி (29), மலா்வேனில் (52), துளசி (53), மல்லிகா (37), சீதா (32), ஆவுடையாா்பட்டு பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (58) உள்பட 30 போ் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரா்கள், பெரியதச்சூா் போலீஸாா் விரைந்து வந்து, காயமடைந்த பயணிகளை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சிவக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பரமேஸ்வரி ஆகியோா் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த பயணிகளுக்கு ஆறுதல் கூறினாா்.

விபத்து குறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT