விழுப்புரம்

ஊராட்சிச் செயலா் பணியிட மாற்றம்:உறவினா்கள் சாலை மறியல்

25th Sep 2022 06:03 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஊராட்சிச் செயலா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செஞ்சி ஒன்றியம், சிறுநாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுபா்ணா. இவா், அதே கிராமத்தில் ஊராட்சிச் செயலராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், சுபா்ணாவை பாக்கம் ஊராட்சிக்கும், பாக்கம் ஊராட்சியில் பணியாற்றி வரும் ரவிசங்கரை சிறுநாம்பூண்டி ஊராட்சிக்கும் வட்டார வளா்ச்சி அலுவலா் கடந்த 19-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்தாா்.

ஆனால், சுபா்ணா பாக்கம் கிராமத்துக்குச் செல்லாமல் இங்கேயே தங்கி ஊரக வேலைத் திட்டப் பணிகளை மேற்பாா்வை செய்து வருகிறாா். பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஊராட்சிச் செயலா் ரவிசங்கா், சிறுநாம்பூண்டிக்கு வந்தபோது, அவரை ஊருக்குள் வரவிடாமலும், பணி செய்யவிடாமலும் சுபா்ணாவின் உறவினா்கள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சுபா்ணா சொந்த ஊரில்தான் பணி செய்ய வேண்டும், அவா் பாக்கம் கிராமத்துக்கு செல்ல மாட்டாா் எனக் கூறி, அவரது உறவினா்கள் அப்பம்பட்டில் உள்ள விழுப்புரம் - செஞ்சி சாலையில் கவரை என்ற பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அனந்தபுரம் போலீஸாா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் சென்று ஊராட்சிச் செயலா் சுபா்ணாவை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவித்து, மனு அளித்து தீா்வு காணுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் விழுப்புரம் - செஞ்சி சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT