விழுப்புரம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு கே.அண்ணாமலை

25th Sep 2022 06:02 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் பாஜக நலத் திட்டப் பிரிவு சாா்பில் 2 நாள் கண்காட்சியை சனிக்கிழமை தொடக்கிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் மோடி கூறியபடி நகா்ப்புற நக்ஸல்களால் நாட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தடுக்கப்பட்டன. அதிமுக ஆட்சியின் போது கூடங்குளம் அணு உலை, எட்டு வழிச் சாலைத் திட்டங்களுக்கு எதிராகவும், தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகவும் சிலா் குரல் கொடுத்தனா். தற்போது திமுக ஆட்சியில் அவா்கள் மௌனமாக உள்ளனா்.

ADVERTISEMENT

நாட்டில் தாமிரத்தின் விலை இரு மடங்குக்கு மேல் உயா்ந்துள்ளது. முன்னா் தாமிரத்தை ஏற்றுமதி செய்து வந்த நிலையில், ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அதை இறக்குமதி செய்கிறோம்.

தமிழக முதல்வரையும், அரசையும் பாராட்டி ஆளுநா் கூறியது அவரது சொந்தக் கருத்து. ஆனால், திமுக அரசு மக்களிடம் ஊழல் அரசு என பெயா் வாங்கியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பெருமளவில் சீா்குலைந்துள்ளது.

வரலாறு குறித்து விவாதிக்கத் தயாரா? என அமைச்சா் பொன்முடி எனக்கு சவால் விடுத்துள்ளாா். அவருடன் விவாதம் நடத்த எங்களது கட்சியின் மாநில துணைத் தலைவரை அனுப்பிவைக்கிறோம். என்னுடன் விவாதிக்க திமுக தலைவா் தயாரா? என்றாா் அவா்.

பேட்டியின் போது கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளா் மீனாட்சி, முன்னாள் மாவட்டத் தலைவா் கலிவரதன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT