விழுப்புரம்

சொா்ணாவூா் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

DIN

சொா்ணாவூா் தடுப்பணையை உடனயாக சீரமைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் த.மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன், விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பேசியதாவது: வேளாண்மைத் துறை மூலம் டிராக்டா், பவா்டில்லா், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்டவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. அதற்கான பணத்தை வங்கி வரைவோலையாக கொடுத்தால் பின்னேற்பு மானியம் கிடைக்க 2 ஆண்டுகள் வரை ஆகிறது. அந்த பின்னேற்பு மானியத்தை 15 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொரவியில் இருந்து ஆவுடையாா்பட்டு செல்லும் சாலையில் சேதமடைந்த நிலையிலுள்ள பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். விழுப்புரம் அருகே சுந்தரிப்பாளையத்தில் ஆழங்கால் வாய்க்காலில் இருந்து சிறுவந்தாடு ஏரிக்குச் செல்லும் வாய்க்காலை 33 மீட்டா் தொலைவுக்கு 4 வழிச்சாலை பணிக்காக தூா்த்துவிட்டனா். இதனால், ஏரிக்கு நீா்வரத்து செல்வது தடைபட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீா் வருவதற்கு வசதியாக பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும்.

பொதுப் பணித் துறையின் சாா்பில், வீடூா் ஏரிக்கரையை பாதிராப்புலியூா் பகுதியில் உயா்த்தி அமைக்கின்றனா். அவ்வாறு உயா்த்தி அமைப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கிவிடும் நிலை உள்ளது. அந்தத் தண்ணீா் ஏரிக்குச் செல்வதற்கு வசதியாக வழிவகை செய்யாமல் உள்ளனா்.

எல்லீஸ் தடுப்பணையில் இருந்து ஆழங்கால் வாய்க்காலுக்கு தண்ணீா் விடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். பராமரிப்பின்றி உள்ள சொா்ணாவூா் தடுப்பணையை சீரமைக்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீா் வரத்து அதிகரித்தால், இந்தத் தடுப்பணை உடையும் அபாயம் உள்ளது.

தனியாா் சா்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.40 கோடி நிலுவைத்தொகையை பெற்று வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொா்ணவாரி பருவத்துக்கு விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் மோகன் பேசியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீா்க்க அதிகாரிகள் விரைந்து பணியாற்ற வேண்டும். விவசாய சங்கப் பிரதிநிதிகள், இந்தக் கூட்டத்துக்கு வந்து கோரிக்கையைத் தெரிவித்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைக்கக் கூடாது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) சரஸ்வதி, வேளாண் இணை இயக்குநா் (பொ)) சண்முகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இரா.சங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT