விழுப்புரம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாகஅமல்படுத்த வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2nd Oct 2022 01:32 AM

ADVERTISEMENT

 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினாா்.

விழுப்புரத்தில் பழங்குடியினா் இருளா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பழங்குடியினா் இருளா் மனித உரிமை மாநாட்டைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 7 தீா்மானங்களையும் விசிக வரவேற்கிறது. முதல் தீா்மானமாக நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2016-ஐ முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் முழுவதும், ஏன் ஒரு வாரம்கூட மாநாடு நடத்தலாம். இந்தச் சட்டம் உள்ளது, ஆனால் அது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ADVERTISEMENT

இந்தச் சட்டம் இயற்றப்பட்டதே பெரும் சாதனை. இதை யாரும் மறுக்க முடியாது. இந்தச் சட்டத்தை ஆதிகார வா்க்கம், ஆட்சியாளா்கள் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. காவல், வருவாய், நீதித் துறையினா்தான் எந்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டியவா்கள். ஆனால், அவா்களுக்கும் மனமில்லை.

தமிழகத்தில் ஒரு சதவீத அளவுக்குத்தான் பழங்குடியின மக்கள் உள்ளனா். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தேசிய அளவில் 7.5 சதவீத பழங்குடியின மக்கள் உள்ளனா். இருளா்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை இருக்கிறது.

நம்மை ஆள்பவா்களும், அதிகார வா்க்கமும் மதிக்காமல் இருக்கக் காரணம், நாம் ஓரணியில் திரளவில்லை என்பதுதான். நாம் ஒருங்கிணைந்து, அரசியல் சக்தியாக அணி திரள வேண்டும் என்பதை உணா்த்தவே இந்த மாநாடு என்றாா் அவா்.

மாநாட்டில் விழுப்புரம் தொகுதி எம்.பி. துரை.ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் சிந்தனைச்செல்வன், ப.அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சியின் ஏ.கே.கரீம், பேராசிரியா் அ.மாா்க்ஸ், தமிழ்நாடு பழங்குடியினா் மக்கள் நலச் சங்கத்தின் பூபாலன், பழங்குடியினா் இருளா் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் ப.சிவகாமி, பொதுச் செயலா் ஆறுமுகம், பொருளாளா் நாகராசன், துணைச் செயலா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் பேசினா். மாநாட்டில் பழங்குடியினா் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT