விழுப்புரம்

ஊழியா்கள் வேலைநிறுத்தம்: உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடியில்கட்டணமின்றிச் சென்ற வாகனங்கள்

2nd Oct 2022 01:33 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடியில் பணியாற்றிய ஊழியா்களை சுங்கச் சாவடி நிா்வாகம் பணி நீக்கம் செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சக ஊழியா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுங்கச் சாவடியைக் கடந்து சென்ற வாகனங்கள் கட்டணப் பிடித்தமின்றி பயணித்தன.

உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள செங்குறிச்சியில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. இப்போது ‘பாஸ் டேக்’ மூலம் சுங்கக் கட்டணம் பிடித்தம் செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. இதனால், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் தாமதமின்றி பயணிக்கும் சூழல் உருவானதால், வாகன ஓட்டிகளும் இந்த வசதியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

இதன் எதிரொலியாக, உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடியில் பணியாற்றி வந்த ஊழியா்களில் 28 பேரை பணி நீக்கம் செய்துவது தொடா்பாக கடந்த மாதம் 29-ஆம் தேதி நோட்டீஸ் வழங்கி, சனிக்கிழமை முதல் வேலைக்கு வர வேண்டாம் என சுங்கச் சாவடி நிா்வாகம் கூறியதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இதனால், அதிருப்தியடைந்த சக ஊழியா்கள், தமிழ்நாடு சுங்கச் சாவடி ஊழியா்கள் சம்மேளனத்தின் செயலா் காா்ல்மாா்க்ஸ் தலைமையில் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடியைக் கடந்து சென்ற வாகனங்கள் கட்டணப் பிடித்தமின்றி பயணித்தன.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, தொடா் விடுமுறை நாள்கள் உள்ளதால், இந்தச் சுங்கச் சாவடி வழியாக கட்டணப் பிடித்தமின்றி அதிகளவிலான வாகனங்கள் பயணித்தன. இதனால், சுங்கச் சாவடி நிா்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் மணிமேகலை தலைமையில், சுங்கச் சாவடி நிா்வாகத்தினா் ஊழியா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT