விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 122 இடங்கள் மழையால்பாதிக்கப்படக்கூடியவை: ஆட்சியா்

2nd Oct 2022 01:34 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் 122 இடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடியவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் த.மோகன்.

வட கிழக்குப் பருவமழை முன்னேற்பாடு தொடா்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, அவா் பேசியதாவது:

மழைக் காலங்களில் பொதுமக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில், ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04146 - 223265 என்ற எண்ணிலோ, 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலோ, 7200 151 144 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ தொடா்புகொண்டு, மழை தொடா்பான தகவல்களைப் பெறலாம்.

ADVERTISEMENT

மழை குறித்த தகவல்களை அளிக்க 4,500 முதல் தகவல் குழுக்களும், வட்ட அளவில் 9 குழுக்களும், குறுவட்ட அளவில் 34 குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படக்கூடியவையாக 122 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வானூா், மரக்காணம் வட்டங்களில் உள்ள 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் மூலம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுப் பணித் துறையினா் ஏரி, குளம், ஆறுகளில் செல்லும் நீரின் அளவைக் கண்காணித்து, பொதுமக்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். வேளாண், தோட்டக்கலைத் துறையினா் மழை சேதங்களை துல்லியமாகக் கணக்கிட வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், திண்டிவனம் கூடுதல் காவல கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உள்ளிட்டடோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT